சமூகத்தின் உணர்வுகளோடு விளையாடவேண்டாம் (கடிதம்)

மிகை அரசியல் பேசி சமூகத்தின்  அடித்தளத்தை மறந்து, மறைத்து பேச வேண்டிய தரவைகளினால் நிரம்பிக்கிடக்கின்ற ஒரு கூட்டமாகவே நாம் NFGG என்கிற கட்சியை நோக்க வேண்டியுள்ளது . ஒரு மாகாண உறுப்பினரை தனது  கொள்கை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியாத கடை நிலையே இது.

கடந்த காலங்களில் முஸ்லீம்கள் மீதான புலிப்பாசிசத்தின் நெருக்குவாரங்கள் , தனது கொள்கைசார் முஸ்லீம்களையே கொன்றுகுவித்த வரலாறுகளும் அதை ஏற்றுக் கொண்ட “துன்பியல்” சம்பவங்களும் என்றும் படிப்பினை.

இந்நிலையில் முஸ்லீம் உணர்வாளர்களின் நிலைப்பாடுகளையும் செயல்பாடுகளையும் ஒருங்கே மறுதலித்து சோற்றுக்குள் மறைக்கின்ற கைங்கரியத்தை அஸ்மின் முன்னெடுத்திருப்பது ஏன் ? தனது பதவி ஒன்றின் மீதான மோகமா இல்லை இன்னுமொரு அஜந்தாவுக்குள் அடக்கமா ? எது எவ்வாறிருப்பினும் அஸ்மின் உட்பட்ட  இயக்கத்தினரின் பாசிசப்புலிகள் உடனான மறுப்புரை அல்லது ஏற்புரை முஸ்லீம்  மக்களின் மனதில் நீங்கா வலியை உண்டாக்கியுள்ளது என்பதில் எள்ளளவும் சந்தேகம் கிடையாது. தங்களால் இயலாச் சுமையெனில் தூக்கியிருக்கவே கூடாது. இல்லாத புலிகளின் மீதே இவ்வளவு அச்சம் என்றால் வரப்போகின்ற எதிர்ப்புகளுக்கு என்ன செய்வதாய் உத்தேசம்?

கிழக்கில்  முஸ்லீம்களை சிறுபான்மை என்கிற வரையைக்குள்  அடக்கவும், முடக்கவும், ஆயுத அதிகார வழங்குகைகள் மூலம் தனது நிலைகளை ஸ்திரப்படுத்தவும் உலக குழப்ப வல்லுநர்கள் முதற்கொண்டு உள்ளக வாங்குனர்களும் முயற்சித்துக் கொண்டிருக்கின்ற தருணமிது, இந்நிலையில் “சேம் சைட் கோல் ” அடிக்கும் துரோகத்தனங்கள் நிரம்பி வழிகிற நிலையில் , இளைஞர்கள் மீதான குறி கொண்டுள்ள அமைப்பொன்றின் பிரதி நிதி வரலாறொன்றை திரிக்கும் நிலை  எமது சமூகத்த்தின் மீதான அடுத்த கட்ட திணிப்பாகவே பார்க்க வேண்டியுள்ளது.

மிக நுணுக்கமாகவும் சாணக்கியத்துடனும் சமூக தலைமைகள் அணுக வேண்டிய சூழ்நிலை ஒன்றை சிறுபிள்ளைத்தனமாக கையாண்டிருப்பது “வீடு வந்து சேரா வேளாண்மைக் ” கதையாகி ஒன்றுமில்லாமலாகிவிட்டது. இத்தவறை  வன்மையாக கண்டிப்பதுடன்  சமூகத்தின் இன்னொரு தலைமுறையை ஏமாற்றாமல் நிஜங்களோடு பயணிக்க வைக்கவேண்டிய கடப்பாடு உணரப்பட வேண்டியது.

-அன்வர் நௌஷாத்