55 கோடி பெறுமதியான கட்டிடத்தை ஏமாற்றிப் பெற முயற்சி: ஹலீம் ஹாஜியார்

கொழும்பு, புதிய சோனகத் தெருவில் அமைந்துள்ள ரூ. 550 மில்லியன் பெறுமதியான தனது உழைப்பில் உருவான கட்டிடத்தை கூட்டு சதி மூலம் அபரிக்க முயற்சி செய்வதாக முறையிட்டுள்ளார் கட்டிட உரிமையாளர் ஹலீம் ஹாஜியார் என அறியப்படும் அல்ஹாஜ் ஸரூக்.

வங்கிக் கடன் பெற்று உருவாக்கப்பெற்ற குறித்த கட்டிடத்தின் (GT Complex) ஒரு சிலருக்கு வாடகைக்கு விட்டிருந்த போதிலும் அவர்களிடமிருந்து முறையான வாடகையைப் பெற முடியாத நிலையில் வங்கிக் கடனையும் திருப்பிச் செலுத்த முடியாது போனதாகவும் இதனால் தனது வீடு மற்றும் மகளின் வீடு உட்பட சொத்துக்களை விற்று வங்கிக்குக் பணம் செலுத்தியுள்ள நிலையில் ஆறு வருடங்களாக வாடகையைத் தராது தவிர்த்து வரும் நபர்கள் தற்போது மாற்று வழியூடாகத் தனது கட்டிடத்தையும் அபகரிக்க முயல்வதாக அவர் மேலும் குற்றஞ்சாட்டியுள்ளார்.

நான்கு மாடிகளைக் கொண்ட பெறுமதியான இக்கட்டிடத்துக்காகத் தனது சொத்துக்களனைத்தையும் இழந்து வாழ்கின்ற நிலையில் தான் நம்பி வாடகைக்குக் கொடுத்தவர்களே தன்னை ஏமாற்றுவதாகவும் அவர்கள் வேறு நபர்களுக்கு இதனை விற்பனை செய்ய முனைவதாகவும் தெரிவித்துள்ள ஹலீம் ஹாஜியார் இதற்காக தலா 10 மில்லியன் அடிப்படையில் 90 மில்லியன் ரூபாவை குறித்த நபர்கள் மோசடியாகப் பெற்றுக்கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இது தொடர்பில் வழக்கு விசாரணை இடம்பெற்று வருவதனால் இவ்வாறு பணம் செலுத்தியவர்களும் தமது பணத்தைத் திருப்பிப் பெற முடியாத நிலை தோன்றியுள்ளதாகவும் தீர்ப்பு தனக்கு சாதகமாக அமையும் என்பதே நிதர்சனம் என்பதால் மோசடிக்காரர்களை நம்பிக் கொடுக்கப்பட்ட பணம் வாடகை நிலுவையாக வங்கியைச் சென்றடையும் எனவும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

எனவே, இந்நிலையில் தான் மாத்திரமன்றி புதிதாகக் பணம் கொடுத்தவர்களும் ஏமாற்றப்படுவதாகவும் நமது சமூகத்தைச் சேர்ந்தவர்களே இவ்வாறு செய்வதாகவும் அதில் ஒருவர் தனது உறவினர் எனவும் ஹலீம் ஹாஜியார் மேலும் தெரிவித்துள்ளார்.

இம்ரான், உமர் கையாம், முசம்மில், ரிப்லான் ஆகிய நால்வருக்கே தான் கட்டிடத்தின் சில கடைத்தொகுதிகளை வாடகைக்குக் கொடுத்திருந்ததாகவும் கடந்த ஆறு வருடங்களாகவே தனக்கு வாடகை வந்து சேராதமையினாலேயே தன்னால் வங்கிக் கடனை உரிய நேரத்தில் திருப்பிச் செலுத்த முடியாது போனதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.