நெஞ்சில் நிறைந்த சாஹிரா!


இளமைக் கால சோலைக் குமரா
இனிக்க இனிக்க கவி சொல்லும் -மூத்த
நுரைச் சோலைக் குமரா
நின் கவி புலமைக்கு முன்னே
நா‌‌‌னென்ன கவி சொல்லவோ?
காணமயிலாடக் கண்ட வான் கோழியாய்
குயில் பாட்டுக்கு எசப்பாட்டு பாடுகின்ற
கூகையின் கூக்குரல் போலது ஆகாதோ?
பள்ளி நினைவுக் கவி யார்த்து வந்துள்ளேன்
எள்ளி நகையாடாதே ஏளனமாய்.

ஏழுவயதானபோதுதான் எழுத்துப் படிக்க
எந்தை இவனையழைத்து வந்தார்
அந்த நாளில் பள்ளி வயது அதுதான்
என் பள்ளி முதல் நாளில் நான் கண்ட
அன்பான டீச்சர்..

யானைப் பாட்டுப் பாடுவார் தடி
யானையைப் போல உடல் வளைத்து
தும்பிக்கைபோல ஒரு கை முன்தொங்க
வாலுக்கும் ஒரு கை பின் தொங்க
ஆனைபோல அசைந்து அசைந்து நடப்பார்.

தோட்டத்தில் மேய்ந்த வெள்ளைப் பசுவும் – அங்கு
துள்ளிக் குதித்த கன்றுக் குட்டியும்
அம்மா என்றழைத்த வெள்ளைப் பசுவும்
அதன் அண்டையில் ஓடிய கண்றுக் குட்டியும்
என்னமாய் இனித்தது நாகம்மா டீச்சர் பாடிய பாட்டு
சுப்பையா, பொன்னையா, நடராஜா, மகேசவேலு
ஜெகுபர் மாஸ்டர், ரியாழ் ஆலி்ம்சா என
மறக்க இயலா அந்த முகங்கள்
அத்தனையும் மனத் திரைக்கு வந்து
முறுக்கி முறுக்கி இதயத்தை பிழிகிற‌தையா

ஒவ்வொரு வகுப்பாய்ச் சொல்லவோ?
ஒருமிக்க பள்ளி வாழ்வைப் பாடவோ?
எல்லாமே இனிக்கையில் எதை மீட்டிச் சுவைக்கவோ
குட்டிகளும் பொடியன்களும் சேர்ந்து படித்த கதையளக்கவோ
பட்டப் பெயர் வாத்திமாருக்கு வைத்த கதை சொல்லவோ?
ஒயிஸ் மாஸ்டர் எங்கள் சித்திர மாஸ்டர்
ஒல்லியாய் இருப்பார் சுள்ளிப் பிரம்பால் சுரீரென்று அடிப்பார்
ஒடுங்குன ஓய்சு வருவாரு வகுப்பக்கு வந்து அடிப்பாரு
அடிச்சிட்டுப் பல்லை இளிப்பாரு என்றெல்லாம்
இலக்கணச் சுத்தமாய் வக்கணைக் கவி புனைந்தோம் தெரியுமா?

இபுனு புரக்டரைத் தெரியுமா உங்களுக்கு
இந்த ஊரின் அந்தநாள் சேர்மன் அவர்
அந்த மனுஷன் எங்களுக்கு பிரின்ஸிபல்
கண்டு கொண்டார் ஒருநாள் நான் நாற்காலியில்
ஒரு காலில் ஆடிக் கொண்டிருந்ததை
தூக்கடா கதிரை என்று சொல்லி
மைதானத்தைச் சுற்றிப் பத்துப் பாட்டம் ஓட வைத்தார்
தட்டித் தட்டிக் கதிரை தலையில் தந்த வலி
தொட்டுப் பார்க்க இன்னும் வலிக்கிறதையா

புஆது ஆலிம்சாவைத் அந்த நாளில் ஏயெலுக்கு
எடுத்த பாடம் அரசியல் அவர் வாயிருந்து
அல்லவா அல்லவா என்னற வார்த்தை
அளவில்லாது கொட்டும் ஒரு முறை அவர்
அல்லவா சொன்னால் நாங்கள் ஒரு கோடு போடுவோம் மேசையில்
பாடம் முடிய எண்ணுவோம் அவர் அல்லவாக்களை
ஒரு நூறையும் தாண்டிவிடும் அவர் அல்லவாக்கள்
ஒட்டு மொத்தமாய் ஒரு நாளில்
ஒரு நூறையும் தாண்டிவிடும் அல்லவாக்கள்
போய்விட்டார்களே எல்லோரும்
போகாமல் நிற்கிறது மனதில் நினைவுகள் மட்டும்.

கூ‌டியிருக்கும் கூட்டத்திலே என் அன்புத் தோழர்
இந்திரா,நபாத், இஸ்மத் , மர்சூக், புஸ்பநாதனெல்லாம்
இருக்கக் கூடுமென துளாவித் துளாவிப் பார்த்தேன்
இல்லையே ஒருவரும் நான் மட்டும்
இங்கிருந்து தனித்திருந்து யாருடன் பேசவோ?
தனிமையில் எதையெண்ணிச் சிரிக்கவோ?
இனிக்குமென எண்ணி வந்தேன் கசக்குதையா
சின்னவர்கள் ‌சேர்ந்து சிரிக்கக் கேட்டு
சிரித்திருந்த நாட்கள் அலை மோதுதையா
பதறி உள்ளம் பதை பதைக்குதையா

ஹாஜராக் கண்ணாவின் அவித்த கடலையும்
சின்னம்மா கண்ணாவின் அவித்த மய்யர் கிழங்கும்
தொட்டுக் கொள்ள கொச்சிக்காய் ஆணம் கொஞ்சமும்
இன்றவெல்லுக்கு அடிக்கும் மணியும்
மணி அடிக்கும் ஹுசைன் காக்காவும்
மணி அடித்த பின்னரும் கிழங்கு தின்றதால்
தாஹா பிரின்சிபலின் துவரம் கம்பு அடியும்
எல்லாமே இனிக்கிறது எதைச் சொல்ல எதை விட
இன்னும் கேட்டால் கத்தியோ விடுவேன்
விட்டு விடுங்கள் போய் வருகிறறேன்

-Abas Shereef