அரசாங்கம் செயலிழந்து போய் நிற்கிறது: மைத்ரி கவலை!

கடந்த ஆட்சியின் போது மக்கள் பணத்தைக் கொள்ளையடித்த பெரும் திருடர்களைப் பிடிக்கப் போவதாக பெயர்ப் பட்டியலை கவர்ச்சிகரமாக வெளியிட்டு விட்டு இன்று வரை அதில் ஒருவரைக் கூட பிடித்த்துத் தண்டிக்க முடியாததேன் என கேள்வியெழுப்பித் தன் கவலையை வெளியிட்டுள்ளார் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன.

நேற்றைய தினம் இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்திலேயே இவ்வாறு தெரிவித்த அவர், மூன்று மாதங்களுக்கு பொலிஸ் மற்றும் நீதித்துறையைத் தனது கட்டுப்பாட்டுக்குள் எடுத்தே இப்பணியைச் செய்ய நேரிடும் எனவும் தெரிவித்திருந்தார்.

ஊழல் ஒழிப்பு செயலகத்தின் பதவிக்காலம் ஜுன் 30ம் திகதியுடன் நிறைவுற்றுள்ள நிலையில் நேற்றைய தினம் அமைச்சரவைக் கூட்டத்தில் இது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. இதன் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்ததுடன் ஈற்றில பௌசி உட்பட அரசின் முக்கியஸ்தர்களையே விசாரித்திருப்பதாகவும் பட்டியலிடப்பட்ட முக்கிய ஊழல்வாதிகள் யாருடைய குற்றத்தையும் ஒப்புவிக்கவோ தண்டனை வாங்கிக் கொடுக்கவோ இல்லையெனவும் மேலும் தமது கவலையை வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில், இன்றைய நாளில் ஊடகங்களைப் பார்ப்பவர்கள் இந்நாட்டில் அரசாங்கம் என்று ஒன்று இயங்குகிறதா எனவும் மக்கள் சந்தேகப்படுவதாகவும்  சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.