ஒரு ஞானசாரவும் 20 லட்சம் முஸ்லிம்களும்!

1505ம் ஆண்டு போர்த்துக்கீயர் இலங்கைக்குள் காலடி வைக்கும் போது கொழும்பு நகரில் இரண்டே இரண்டு பள்ளிவாசல்களே இருந்தது.

சுமார் 300 ஆண்டுகளின் பின் 1824 இலேயே இத்தொகை பதினேழாக உயர்ந்தது. இதில் ஜும்மா பள்ளிவாசல்கள் எங்கு, எவ்வாறு அமைய வேண்டும் என்பது முதல் திண்ணைப்பள்ளிகளாக செயற்பட்ட மதரசாக்கள் மற்றும் சமூகக் கட்டமைப்புகள் ஏதோ ஒரு வகையான ஒருங்கிணைப்புக்குள் காணப்பட்டது.

ஆதலால், சமூகப் போராட்டம் ஒருங்கிணைக்கப்பட்டதாகவும் போராட்டத்திலும் விளைவிலும் முழு சமூகமும் பங்கெடுக்கக் கூடியதாகவும் இருந்தது.

இறுதியாகக் கடந்து சென்ற அரை நூற்றாண்டு வரை பெரும்பாலும் நமது சமூகப் போராட்டங்களைத் தாமாக முன் வந்து முன்னெடுத்துச் சென்ற தலைவர்கள் தூர நோக்குள்ளவர்களாகவும் நாடளாவிய ரீதியில் பரந்திருக்கும் சமூகத்தின் பிரச்சினைகளைப் பற்றிய விரிவான சிந்தனையுள்ளவர்களாகவும் இருந்தார்கள்.

துரதிஷ்டவசமாக அந்த யுகம் மாறி தற்போது கட்சி மற்றும் கொள்கைப் பிரிவினை மலிந்து போயுள்ள சமூகமாக மாறியுள்ளது இலங்கையின் முஸ்லிம் சமூகம்.

இதன் பயன்பாட்டை நன்கு திட்டமிட்டு அறிந்து கொண்டு களமிறங்கிய ஒரு ஞானசார எனும் மனிதன் முஸ்லிம் சமூகத்துக்கு உளைச்சலை ஏற்படுத்தும் பெரும் காரணியாக மாறி தொடர்ந்தும் வளர்ச்சி பெற்றுள்ளமை கண்கூடு.

மஹிந்த ராஜபக்ச அரசில் தனி நாட்டுப் போராட்டம் மாத்திரமன்றி அதையும் தாண்டிய விடுதலை மற்றும் சுயகௌரவம் வேண்டிய போராட்டமும் சேர்ந்தே அடக்கப்பட்டது. இலங்கை வரலாற்றில் இது முதற்தடவையும் இல்லை.

கி.பி 12ல் யாழ்ப்பாண இராச்சியத்தின் தோற்றம் முதல் மறைவு வரை பல வெற்றி தோல்விகள் மற்றும் அவ்வப்போதான விட்டுக்கொடுப்புகளும் கூட தமிழ் – சிங்கள சமூகத்தின் மத்தியில் காணப்பட்டிருந்தது.

முஸ்லிம் சமூகத்தின் நிலை எப்போதுமே மாறுபட்டதாகவும் சாணக்கிய நகர்வுகள் வேண்டியதாகவுமே அன்னியர் ஆட்சிக்காலம் முதல் இருந்து வந்ததனால் ராஜதந்திர ரீதியில் கொடுக்கல் – வாங்கலிலேயே நமது மூதாதையர்களும் கைதேர்ந்திருந்தனர்.

தாம் அரசுக்குக் கொடுக்கும் அளவுக்கும் அதற்கு மேலும் பெற்று, அந்தச் சலுகைகளின் பயனை இன்றளவும் அனுபவித்து வந்த சமூகம் ஏதோ ஒரு கட்டத்தில் 2009ம் ஆண்டின் பின்னர் சூதினால் கவ்வப்பட்டது என்று நினைத்துக்கொண்டிருக்கும் நாம் எப்போதுமே நமது தவறுகளை சுயவிமர்சனம் செய்து பார்ப்பதில்லை.

பொறுப்புகளை யாரோ சுமப்பார்கள் என்ற போக்கு மாறாததல் வெகுஜன விழிப்புணர்வு மிகவும் குறைவானதாகவும் உணர்ச்சி மேலோங்கியதாகவும் நமது சமூகம் வாழ்ந்து வருகிறது.

இறுதியாக இலங்கை வந்து சேர்ந்த மியன்மார் அகதிகள் விவகாரத்தையே எடுத்துக்கொண்டாலும் கூட கரையொதுங்கியவர்களுக்காக உண்மையிலேயே ஒரு கண்ணீர்த்துளி விட்ட எம் மக்கள் இப்போது அவர்களுக்கு என்னானது என்பதைத் தேடிப்பார்க்கக் கூட விளைவதில்லை.

35 வருடங்களாக உலகமெல்லாம் அகதிகளை அனுப்பி வரும் இலங்கை, ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகள் பாதுகாப்பு சாசனத்தில் கையொப்பமிடவில்லையென்பதால் அகதிகளைப் பாதுகாக்கும் கடப்பாடற்ற நாடாக  திகழ்கிறது.

இதையும் மீறிய எமது உணர்வு முதல் நாள் இரண்டாம் நாளோடு மறைந்து போனதால் எப்படியோ நாடுகடத்தப்படப் போகும் அம்மக்கள் குறித்து ‘செய்தி’ படித்ததோடு எம் சமூகம் மறந்துவிட்டது. இது எமது உணர்வுகளின் கால எல்லைக்கு அண்மைக்கால உதாரணங்களுள் ஒன்றாகத் திகழ்கிறது.

ஏனெனில் நாம் வரையறைகளைத் தாமாக உருவாக்கிய சமூகமாகத் திகழ்வதால் எப்போது தனி நபருக்கு அதன் பாதிப்பு வருகிறதோ அப்போது மாத்திரமே அந்தத் தனி நபர் தன் பிரச்சினையைப் பற்றிப் பேச ஆரம்பிக்கிறார்.

சில நேரங்களில் வரையறைகளை நாமாகவே உருவாக்கிக் கொள்ளவும் செய்கிறோம், புத்திசாலித்தனமாக இயங்குவதாக் கண்டு கொள்ளும் நாம் அவற்றின் பின் விளைவுகள் பற்றி சற்றே குறைவாகவே சிந்திக்கிறோம்.

கடந்த வருடம் நவம்பர் மாதத்தில் திடீரெனத் தோன்றி எழுச்சி பெற்ற டான் பிரசாத் எனும் ஒரு இனவாதியை நிகழ்ச்சி நிரலுக்கேற்ப பொலிசார் கைது செய்த போது நாமாகவே ஆஜராகி அந்த இனவாதியைத் தொடர்ந்து சிறையிலடைக்க வேண்டும் என கங்கணம் கட்டினோம்.

மறு வாரமே அப்துர் ராசிக் கைதானதும் அவருக்காகவும் ஆஜராகிய அதே நாம் இவரைக் காப்பாற்ற அவருக்கு மன்னிப்பு வழங்கி இனவாத வழக்காடலுக்கு வேறு ஒரு வடிவத்தை உருவாக்கிக் காட்டினோம்.

ஆதலால், ஞானசார தானாக மாட்டிக்கொண்டு சட்டம் தன் கடமையைச் செய்தால் தான் உண்டு என்பதைத் தவிர வேறு வழியில்லை.

கடந்த வருடம் நீதிமன்ற அவமதிப்பு மற்றும் சாட்சியை அச்சுறுத்திய இரு குற்றச்சாட்டில் ஞானசார தானாக மாட்டிக்கொண்ட சம்பவத்தைக் கண்டோம்.

இவ்வருடம் மார்ச் மாதம் லண்டன் வந்திருந்த அமைச்சர் சாகல ரத்நாயக்கவிடம் நாச்சியாதீவு பிரச்சினை பற்றிப் பேசிக்கொண்டிருந்த போது அதனை அவர் ஒரு கேள்வியாகக் கேட்டார். அதாவது, யார் நினைத்திருப்பார் ஞானசாரவை நாங்கள் கைது செய்வோம் என என்பது அவரது கேள்வி.

இவ்வாறு தானாக மாட்டிக்கொண்டாலேயன்றி ஞானசாரவை விட்டுக்கொடுப்புக்கான ஆயுதமாக மாத்திரமே நாம் பயன்படுத்த முடியும் என்பதால் இன்னுமொரு சந்தர்ப்பத்துக்காகக் காத்திருப்பதும் அதுவரை மன உளைச்சலுக்குள்ளாவதும் தொடரும் வேதனைகள்.

இந்த வேதனை கூட வேறுபாடு கொண்டது. சமூகத்தின் இன்னொரு பகுதிக்கு இது என்னவென்றே தெரியாது, இன்னொரு பகுதிக்கு இதில் ஆர்வமில்லை மேலும் ஒரு பகுதிக்கு அவரவர் கொள்கை இயக்கங்களை ஞானசார விடயத்தில் அடையாளப்படுத்திக் கொள்ளவும் விருப்பமில்லை.

மஹிந்த ஆட்சியில் இனவாதம் உச்சகட்டத்தை அடைந்து கொண்டிருந்த காலத்தில் முஸ்லிம் வர்த்தகரின் ஆடை வர்த்தக நிலையம் தாக்கப்பட்டது. அன்றிரவு அவர் இனியில்லையென்ற கோபத்தில் இருந்தார். அச்செய்தி மறுநாள் உலகமெல்லாம் வரவேண்டும் என்று கோபப்பட்டு கொந்தளித்தார்.

அடுத்த சில மணிநேரங்களில் அவரது கைத்தொலைபேசி முற்றாக நிறுத்தப்பட்டு வேண்டுமானால் ‘குறுஞ்செய்தி’ அனுப்புங்கள் என்று அறிவித்தல் வந்தது. அதற்கிடையில் இந்த ஒரு இடம் மாத்திரமல்ல நாட்டில் பல இடங்களில் கிளைகள் இருக்கிறது என்கிற உண்மையை அவருக்கு அரசியல்வாதிகள் புரிய வைத்து விட்டனர்.

உழைத்து முன்னேறிய அவரது நிலைப்பாடும் ஏளனத்துக்குரியதில்லை. ஏனெனில் அதற்கற்பால் அவர் தனி மனிதர், அவர் குடும்பமும் தனியொரு குடும்பமாகவும் மாறி விடும். எனவே, அவரே அந்த முடிவுக்கும் பொறுப்பானவராவார்.

இப்படியான சூழ்நிலையில் முரண்களத்திலேயே முஸ்லிம் சமூகம் ஞானசாரவை சந்தித்து வருகிறது.

ஞானசாரவுக்கு எதிரான முஸ்லிம்களின் உணர்வு.. அது சிறிய அளவாக இருந்தாலும் பெரிய அளவாக இருந்தாலும் அதற்குப் பெறுமதியுண்டு. ஏனெனில் அந்த உணர்வுதான் ஈற்றில் ஆட்சி மாற்றத்தின் போது வாக்குகளாக வீழ்ந்து மைத்ரிபாலவை ஜனாதிபதியாக்கி, நல்லாட்சி எனும் தலைப்பில் புது நாடாளுமன்றையும் உருவாக்கியது.

அங்கே அதன் முதலீட்டைச் சரிவரப்பயன்படுத்தி உள்ளூராட்சித் தேர்தல் மூலம் அரச இயந்திரத்தைப் பல்படுத்த முடியாது போனதன் விளைவால் மைத்ரி அரசு மீண்டும் முஸ்லிம்களை ஞானசாரவின் இனவெறிப் பசிக்கு இரையாக்கிக் கொண்டு வருகிறது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைப் பதவி வந்தாலும் கட்சியின் கட்டுப்பாடு இல்லாததால் மைத்ரி ஆள் தேடி முடிவதற்குள் மீண்டும் ஞானசாரவின் ஆட்டம் ஆரம்பித்து விட்டது.

இப்போது இது 20 லட்சம் முஸ்லிம்களுக்கு எதிரான பிரச்சினை. ஆனால், அதற்கான முடிவை யார் எடுப்பது? யார் முன்னிற்பது போன்ற கேள்விகள் தொக்கி நிற்கின்றன. வழக்கம் போல அரசியல்வாதிகளே மக்களின் முன் வந்து நிற்பார்கள்.

இந்நேரத்தில் சிறு ஞாபகம், இனவாதம் துளிர்விட ஆரம்பித்த 2011 காலப்பகுதியில் அநுராதபுரத்தில் சியாரமொன்று உடைக்கப்படுகிறது. அங்கு என்ன நடந்தது, மார்க்க சரி பிழைகளுக்கப்பால் அது வரலாற்றுத் தொன்மை வாய்ந்த கட்டிடம் எனவே கட்டிடம் தரைமட்டமாக்கப்படுவது அங்கு வரலாற்றையும் சேர்ந்தே அழிக்கிறது என்பதால் அப்போதிருந்த ஒரு முஸ்லிம் அமைச்சரைத் தொடர்பு கொண்டு கேட்டேன்.

அதற்கு அவர், அப்படியா? அங்குள்ள யாரும் எனக்கு இன்னும் முறையிடவில்லையே என்று பதிலளித்ததோடு என் அரபுலக நண்பர்கள் இங்கு வந்து இது பௌத்த நாடா? அரபுநாடா? நாலாபுறமும் பள்ளிவாசல்கள் எந்நேரமும் பாங்கோசை என புகழ்கிறார்கள் இப்படியிருக்க நீங்கள் ஏன் அரசாங்கத்தை சந்தேகப்படுகிறீர்கள் என மறு கேள்வி கேட்டார். (அதன் ஒலி வடிவம் முஸ்லிம்குரல் யுடியுபில் இன்னும் இருக்கிறது).

பின் அதே அமைச்சர் இனவாதிகளின் இலக்கான பின் இனவாதத்துக்கு எதிராகப் போராட ஆரம்பித்தார். அதுவும் வரலாறு.

ஆக, நாம் நம்மை சூழ்ந்திருக்கும் சதிகளை எப்போது உணர்ந்து கொள்ள ஆரம்பிக்கிறோம் என்பதிலிருந்து நமது போராட்ட வடிவம் ஆரம்பிக்கிறது.

ஞானசார விவகாரத்தில் அது ஒட்டுமொத்த சமூகத்தினால் உணரப்படும் ஒரு விடயமாக அமையுமா என்பது கேள்விக்குறியே என்றாலும் அது தீயாகப் பரவி மூலை முடுக்கெல்லாம் பாய முன்னராக ராஜதந்திர நகர்வுகள் மூலம் முறியடிக்கும் கடமைப்பாடு இருக்கிறது, சந்தேகமே இல்லை அது அரசியல் தலைவர்கள் குறிப்பாக நாடாளுமன்றில் அமர்ந்திருப்போரிடமே தங்கியிருக்கிறது.

முதலில் நாம் பலவீனமானவர்கள், பொலன்நறுவ சோமாவதி முதல் வில்பத்து மறிச்சுக்கட்டி மற்றும் கண்டி நகரத்தின் எமது இருப்பில் கூட பலவீனம் செறிந்திருக்கிறது. இவற்றில் பிரதானமானது கடந்த காலங்களில் நாம் நம்பிக்கையடிப்படையில் அரசுடன் – ஆட்சியாளர்களுடன் – அதிகார வர்க்கத்துடன் செய்து கொண்ட கொடுக்கல் வாங்கல்கள்.

இவை நிலைத்திருப்பதற்கான எந்த உத்தரவாதமும் இல்லை. ஆதலால் தான் பிக்குகள் கூட்டமாக வந்து கொட்டில்களை உடைக்கும் போது ஓடி ஒளிய முடிகிறதே தவிர, அதனை எதிர்கொள்ள முடியயில்லை.

முஸ்லிம்கள் செறிந்து வாழும் கிழக்கின் நிர்வாகம் முஸ்லிம்கள் வசமிருந்தால் எல்லாம் சாதிக்கமுடியும் என்று கூறி வந்த எமது உணர்ச்சி அரசியல் கல்குடாவில் மதுபானத் தொழிற்சாலை வர முன் தடுக்காது வந்த பின் மார்க்கரீதியான போராட்டமாக்கி கையாலாகாத அரசியல் செய்கிறது.

அரசுக்கு வருவாய் ஈட்டித்தரும் ஒரு விடயத்தை ராஜதந்திரமாகக் கையாள முடியாது இனி அது ஒரு சமூகத்தின் மார்க்கப் பிரச்சினையாக்க எம்மால் முடியும் என்றால் எம்மை அடக்க ஞானசார போன்ற இனவாதிகள் அரச இயந்திரத்துக்கும் அவசியப்படுகிறது என்பதை மறுக்க முடியாது.

எனவே, என்று நாம் இலங்கையர்களாக சிந்தித்து, எம் சமூக நலனை சாணக்கியமாக நெறிப்படுத்திக் கொள்ளப்போகிறோம் என்பதிலிருந்து இந்த கேள்வி ஆரம்பமாகிறது. விடை தேடி நெடுங்காலம் நாம் செல்ல வேண்டும். ஏனெனில் அந்த அளவுக்கு எம் மத்தியில் பிரிவினைகள்.

ஒருவரையொருவர் முந்திச் செல்லும் சுயநலப் போட்டியில் நாம் செலவு செய்யும் கோடிகளும் ஞானசாரக்களின் கையில் இருக்கும் என்.ஜி.ஓக்களின் பட்டியலும் அவை முஸ்லிம்களைத் திருப்திப்படுத்த வகுத்திருக்கும் சாசனங்களும் சாதாரணமானவையோ இல்லையோ இலங்கைத் தீவின் பொது நல ஓட்டத்தில் பல முரண்பாடுகளைக் கொண்டவை.

இதுதான் கோத்தபாயவின் பிடியாக இருந்தது, ஞானசார அவரிடம் கற்றுக்கொண்ட மந்திரமாகவுள்ளது. ஆதலால, இடியப்பப் பின்னலாகி விட்ட எமது சொந்தப் பிரச்சினைகளை அடிப்படையாகக் கொண்டு ஞானசாராக்கள் எம்மை மிரட்டுகிறார்கள்.

சுதாரித்துக்கொள்ள முடியாத சூழ்நிலைக் கைதிகளாய் இன்னும் தொடர்கிறது எம் கதை!

-Irfan Iqbal

https://www.facebook.com/irfaninweb