மனோ கணேசனை ‘யோதயா’ என்றழைத்த ஞானசார!

மஹிந்த ஆட்சியின் போது சிறுபான்மையினத்தைச் சேர்ந்த அமைச்சரான ரிசாத் பதியுதீனின் அமைச்சுக்குள் உட்புகுந்து பொது பல சேனா பயங்கரவாதிகள் சர்ச்சையை உருவாக்கியிருந்த நிலையில் இன்றைய தினம் அமைச்சர் மனோ கணேசனின் அமைச்சுக்குள் ஞானசார தலைமையில் சென்ற குழுவினால் அங்கு சற்று நேரம் பதட்டம் நிலவியிருந்தது.

ஞானசாரவுடனான சந்திப்பை மனோ கணேசன் இரத்துச் செய்திருந்த போதிலும் அடாவடியாக அங்கு சென்ற ஞானசார, அமைச்சரை சந்தித்தே ஆக வேண்டும் என அடாவடியில் ஈடுபட்டதுடன் அங்குள்ள பணியாளர்களுடனும் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தார்.

பின்னர், அங்கு பிரசன்னமான அமைச்சர் மனோ கணேசனை அதிகாரத் தொனியில் மிரட்டிப் பேசிய ஞானசார, இலங்கை ஒரு பௌத்த நாடு என்பதை ஏற்றுக்கொள்ள முடியுமா முடியாதா என வினாவெழுப்பிய நிலையில் இந்நாட்டில் பௌத்தர்கள் பெரும்பான்மையானவர்கள் என ஏற்றுக்கொள்ளலாம் என அமைச்சர் பதிலளிக்கவே, இது ஓரு சிங்கள பௌத்த நாடென்பதை ஏற்றுக்கொள்ளாது நல்லிணக்கத்தைப் பற்றிப் பேச முடியாது ‘யோதயனே’ என உரத்துச் சொல்லியிருந்தார்.

மைத்ரி அரசிலும் வெறுப்பூட்டலுக்குத் தனக்குக் கிடைக்கப்பெற்றிருக்கும் சுதந்திரத்தைப் பயன்படுத்தி சிறுபான்மையின அமைச்சர் ஒருவரை கேவலப்படுத்தும் வகையிலான வார்த்தைப் பிரயோகங்களையும் பயன்படுத்தியிருந்ததோடு மஹாநாயக்கர்களோடு பேசி எந்தத் தீர்வும் வரப் போவதில்லையெனவும் கீழ் மட்டத்திலுள்ள துறவிகளுடன் பேசியே பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டும் எனவும் தெரிவித்ததோடு தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சுக்கு மனோ கணேசன் தகுதியற்றவர் எனவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.