மாயக்கல்லி; அணுகுமுறைமையில் மாற்றம் அவசியம்

மாயக்கல்லி பிரச்சனைதான் சிங்கள – பௌத்த பேரினவாத ஆதிக்க சக்திகளின் முஸ்லிம்களுக்கு எதிரான தொடக்க நிகழ்வும் அல்ல. மற்றும் அது இறுதியாகவும் இருக்கப்போவதில்லை. இது போன்ற பல்வேறு நில அபகரிப்புக்களும் அத்துமீறல்களும் நடந்திருக்கின்றன. எதிர்காலத்திலும் நடக்கும் என்ற எச்சரிக்கையும் விடுக்கப்பட்டிருக்கின்றது.

குறிப்பாக அம்பாரை மாவட்டத்தில் குறிப்பாக முஸ்லிம் பிரதேசங்களில் இன்னும் சுமார் 150 இடங்களில் பௌத்த சின்னங்களை நிறுவ இருப்பதாகவும் அதற்கான அங்கீகாரத்தை இலங்கை அரசாங்கம் ஏலவே அனுமதித்திருப்பதாகவும் சிங்கள – பௌத்த பேரினவாத ஆதிக்க சக்திகளின் குரல்கள் ஒலித்துக்கொண்டிருக்கின்றன. இது மிகவும் ஆபத்தான சமிக்ஞையாகவே முஸ்லிம் சமூகத்தின் முன் இருப்பதையும் நாம் இலகுவில் கடந்து செல்ல முடியாது.

நிலப்பறிப்பு, காணி சுவீகரிப்பு போன்றவைகளை அரசாங்கம் ஒரு வகையில் பகிரங்கப்படுத்தித்தான் இதனைச் செய்கின்றது. புதைபொருள் ஆராய்ச்சி என்ற அடிப்படையிலும் வன ஜீவராசிகள் பகுதிகள் என்ற அடிப்படையிலும் அடையாளப்படுத்தி அதற்கான வர்த்தமானி அறிவித்தல்களையும் வெளியிட்டு கையகப்படுத்துகின்றது. இந்த அடிப்படையில்தான் மாயக்கல்லி விவகாரமும் 2010களில் வர்த்தமான அறிவித்தல்களுக்கு உட்பட்டிருக்கின்றது.

இவ்வாறு அறிவித்தல்கள் வெளிவருகின்ற போது நமது மக்கள் பிரதிநிதிகள் அதுகுறித்து அக்கறை காட்டியதாகவோ அல்லது அதனை அறிந்து அதற்கான எதிர்க்குரல்களை பதிவுசெய்ததாகவோ காண முடியவில்லை. அதேநேரம் நமது புத்திஜீவிகள் மற்றும் தினைக்கள ரீதியாக கடமையாற்றும் அரச ஊழியர்களோ இது பற்றிய விழிப்பூட்டல்களை மக்கள் மத்தியில் ஏற்படுத்தவும் இல்லை. இத்தகைய பலவீனங்கள் சிங்கள – பௌத்த ஆதிக்க சக்திகளின் அத்துமீறல்களை அம்பலப்படுத்துவதில் பின்னடைவுகளையே நாம் சந்தித்துவருகின்றோம்.

மக்கள் பிரதிநிதிகள் என்பவர்கள் நமக்கு அபிவிருத்திகளைச் செய்ய வேண்டும் என்பதற்காக மாத்திரம் நாம் தேர்ந்தெடுத்து அனுப்புபவர்கள் போன்றும் அதற்காகவே தாங்கள் இருப்பது போன்றும் அவர்கள் நம் மத்தியில் காண்பித்துக் கொண்டு தமது அரசியல் பிரதிநிதித்துவத்தை அனுபவித்துக்கொள்கின்றனர். உண்மையில் ஒரு மக்கள் பிரதிநிதியின் கடமை எனும்போது அபிவிருத்தி என்பது உரிமைத்துவ அரசியலுக்கு அப்பாலான ஒன்றல்ல. அதேபோன்றுதான் நமது உரிமைத்துவ அரசியலின் இன்னொரு பக்கமான நமக்கெதிரான சட்டங்கள் இயற்றப்படுகின்ற போது அதனை எதிர்த்து நிற்க வேண்டிய பொறுப்பும் உடையவர்களாவர்.

இவ்வாறான பொறுப்புக்களை அவர்கள் சுமந்திருந்த போதிலும் அதனை அவர்கள் சரிவர நிறைவேற்றுகின்றனரா என்பது ஒரு விடயம். அவ்வாறு அவர்கள் செய்கின்றார்களா என்பதில் மக்களாகிய நாம் அவதானிக்கத்தவறுவது இன்னொரு பக்கமாகும். இந்தப் பொறுப்புணர்ச்சி அற்ற இயல்பில் நாம் இருப்பதுதான் நம்மையும் நமது பிரதிநிதிகளையும் கையாலாகாதவர்களாக ஆக்கிக்கொண்டிருப்பதன் பின்புலம் என்பதையும் நாம் சிந்தித்து உணர கடமைப்பட்டுள்ளோம்.

நம் மத்தியில் வருகின்ற மக்கள் பிரதிநிதிகள் இன்றைய சூழலின் அடிப்படையில் தனிக்கட்சிகளிலும் பெரும் தேசியவாத தேசியக் கட்சிகளிலும் உறுப்புரிமை கொண்டவர்களாக இருக்கின்றனர். இவ்வாறு அவர்கள் தமது பிரதிநிதித்துவத்தை உறுதி செய்வதற்காக எந்தக் கட்சியில் வந்தாலும் அது அவர்களின் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்வதற்காக எடுக்கப்படுகின்ற ஒரு முனைப்பான முயற்சியாகும். அதற்கென்று அவர்கள் பல கட்சிகளில் பிரிந்து நின்று பிரதிநிதிகளாக வருவதென்பது தவிர்க்க முடியாத ஒன்றாகும்.

என்றாலும் முஸ்லிம்களுக்கு பிரச்சனைகள் என்று வருகின்ற போது முதலில் நமது மக்கள் பிரதிநிதிகள் தாம் சார்ந்திருக்கின்ற அரசியல் கட்சியின் பற்றுதலை துறக்க வேண்டும். நாம் முஸ்லிம் என்பதையும் நமது கடமை முஸ்லிம் மக்களின் பிரச்சனைகளை தீர்ப்பதற்கான வழிதேடுவதுமாகும் என்ற உறுதிப்பாடும் நிலைப்பாடும் நமது பிரதிநிதிகளிடம் நிரப்பமாக இருக்க வேண்டியது அவசியமாகும்.

அவ்வாறு இருப்பதன் ஊடாகத்தான் நமது பிரச்சனைகளை தீர்த்துக்கொள்வதற்கு சரியான அனுகுமுறைமைகளை ஒரே முகமாக முன்வைக்க முடியும்.மாறாக தேர்தல் காலங்களில் தாம் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற கட்சி சார்ந்த சிந்தனைகளை வெளிப்படுத்துவது போன்று பிரச்சனைகளின் போதும் அவரவர்களின் இஷ்டத்துக்கு பல்வேறு அபிப்பிராயங்களை முன்வைக்கின்ற ஒரு நிலைக்கு நமது பிரதிநிதிகள் ஆட்பட்டவர்களாக செயற்படுகின்றனர். இதற்கு பின்வரும் உதாரணங்களை எடுத்து நோக்க முடியும்.

மாயக்கல்லி மலையடிவாரத்தில் பௌத்த விகாரை அமைப்பதற்காகா அத்துமீறி பிடிக்கப்பட்டிருக்கின்ற நிலம் என்பது முஸ்லிம்களுடையதாகும். இது குறித்து நமது கட்சிகள் கருத்துக்களைச் சொல்லுகின்ற போது ஒரு தரப்பினர் காணிச் சொந்தக்காரருக்கான மாற்றுக் காணியினை வழங்கிவிட்டு அந்த இடத்தில் விகாரை அமைக்கலாம் என்று கூறுவது, இன்னொரு தரப்பினர் இங்கு பௌத்த விகாரை அமையவே கூடாதென்று கூறுவது மற்றொரு தரப்பினர் தேவையென்றால் நிலத்தை விட்டுவிட்டு மலையிலேயே விகாரையினை அமைத்துக்கொள்ளலாம் என்றும் வெவ்வேறு அபிப்பிராயங்களைத் தெரிவிப்பது ஒரு பிரச்சனைக்கு தீர்வாக முடியாது.

அதுமாத்திரமன்றி கடந்த வெள்ளிகிழமை மாயக்கல்லி மலை விவகாரத்தை முன்னிறுத்தி அம்பாரை மாவட்ட முஸ்லிம் பிரதேசங்களின் அமைதியான கண்டனப் பேரணிகளும் பிரதேச செயலகங்களில் மகஜர் கையளிக்கும் நிகழ்வுகளும் நடைபெற்றதை நாம் அறிவோம். அதுகூட மிகவும் பிசுபிசுத்த நிலையில் அங்குமிங்குமாக ஒரு சிலரின் பங்குபற்றுதலுடன் நடைபெற்றிருப்பதை அவதானிக்க முடிந்தது.

ஆனால் தேர்தல் காலங்களில் ஒரு வேட்பாளர் தனது பலத்தைக் காட்ட அந்தந்த கட்சி ஆதரவாளர்கள் ஒன்று திரள்வதும் அவர்களை ஒன்றுதிரட்டத் தேவையான வசதி வாய்ப்புக்களை ஏற்படுத்தி ஒரு பிரம்மாண்டத்தைக் காண்பிப்பதற்காக செலவிடும் அந்த நேரம் மற்றும் பொருளாதாரங்களை இப்படியான விவகாரங்களில் பிரயோகிப்பதற்கு நமது பிரதிநிதிகள் தயாராக இருப்பதில்லை.

உண்மையில் முஸ்லிம் சமூகத்தைப் பொறுத்தவரை போராட்ட குணம் என்பது மிகக்குறைந்த நிலையில் இருப்பது கண்டறியப்பட்ட உண்மையாகும். ஆயின் அவர்களை சரியாக நெறிப்படுத்தி இவ்வாறான விடயங்களில் ஒற்றுமையாக பங்குபற்றச் செய்வதில் நமது அரசியல் பிரதிநிதிகளுக்கும் குடியியல் சமூகத்தின் அமைப்புக்களுக்கும் பொறுப்புக்கள் உண்டு என்பதை அவர்களும் உணர்ந்து செயற்படவேண்டிய ஒரு தேவையை அது காட்டிநிற்பதையும் நாம் மறந்திடலாகாது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீமும் அவரைச் சார்ந்த அரசியல் பிரதிநிதிகளும் இறக்காமம் ஜம்இய்யதுல் தைக்கா பள்ளிவாசலில் கலந்துரையாடல் ஒன்றை பாரியளவில் ஏற்பாடு செய்து இப்பிரச்சனையை தீர்ப்பது குறித்து கருத்துக்களை வெளியிட்டனர். அதிலும் குறிப்பாக தலைவர் ரவூப் ஹக்கீம் மாயக்கல்லி பகுதியில் புதிய எந்த ஒரு கட்டிடமும் அமைக்கப்படமாட்டாது என ஜனாதிபதி தன்னிடம் உறுதியளித்திருப்பதாக குறிப்பிட்டிருந்தார்.

இந்த உத்தரவாதத்தை முஸ்லிம்களிடம் வழங்குவதைப் பார்க்கிலும் சிங்கள மக்கள் பிரதிநிதிகள் மற்றும் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ பிரதிநிதி, விகாரை அமைக்க முற்படுகின்ற சிங்கள – பௌத்த ஆதிக்க சக்திகளிடம் தடுப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதும் புதிய கட்டிடங்களை அங்கு அமைக்க முடியாது என்பதற்கான காரணங்களை சிங்கள மக்களுக்கு தெளிவூட்டுவதற்கான முயற்சிகளையும் நாம் எடுத்திருக்க வேண்டும்.

அதுமாத்திரமன்றி அரசாங்க அதிபர், அம்பாரை மாவட்ட சிங்கள மக்களின் பிரதிநிதிகள் மற்றும் மகாநாயக்க பீடங்களின் தலைவர்களினூடாக இந்த உறுதிமொழியை முன்வைப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருப்பின் அது ஒரு பிரச்சனைக்குத் தீர்வான நகர்வாக அமைவதற்கு வாய்ப்பாக அமையும் என்று குறிப்பிட முடியும். அதுவல்லாது முஸ்லிம்கள் மத்தியில் இந்த உறுதிமொழியைக் கூறுவதனூடாக முஸ்லிம்களிடம் எழுந்திருக்கின்ற நியாயமான உணர்ச்சிகளை குறைக்கவே உதவும்.

அண்மையில் மே தின உரையில் கூட ஜனாதிபதி ஒரு இனத்துக்காக மட்டும் உரித்துடைய அரசு இதுவல்ல என்று பகிரங்கமாக அறிவித்திருக்கிறார். ஆனால் அவரது பதவிக்காலத்தில் சிங்கள பேரினவாதிகளின் போக்குக்கு இசைவக செயற்பட்டிருக்கிறாரே தவிர இந்நாட்டின் ஏனைய பிரதான சமூகங்களான தமிழ், முஸ்லிம் தரப்பினர்களின் நியாயன்களைக் கேட்டு அதற்கு முக்கியத்துவம் வழங்கி செயற்பட்ட தருணங்கள் மிக அரிதாகவே காணப்படுகின்றன.

இனியாவது இந்த உரையின் அடிப்படையில் ஜனாதிபதி செயற்படுவாரேயானால் இன நல்லிணக்கங்களும் சிறுபான்மைச் சமூகத்தினர்களிடம் நம்பிக்கையும் இந்த நாட்டில் வேரூன்றச் செய்வதற்கான வாய்ப்புக்கள் ஏற்படும் என்று நம்பலாம்.

அக்கரைப்பற்றை அண்மித்துள்ள நுரைச்சோலை விட்டு விவகாரத்தில் அமைச்சர் ரிஷாட் அமைச்சரவைப் பத்திரம் ஒன்றை தாக்கல் செய்து கட்டப்பட்டிருக்கின்ற வீடுகளை முஸ்லிம்களுக்கு மாத்திரமன்றி கையளிப்பதற்கான ஒரு வாய்ப்பை திறந்துவிட முயன்றிருக்கிறார். இதனை தேசிய காங்கிரஸின் தலைவரான அதாவுல்லாஹ் பிழையான செயற்பாடு என கண்டித்திருக்கிறார். அம்பாரை மாவட்டத்தில் முஸ்லிம் பிரதேசங்களில் அமைந்துள்ள மேட்டுநிலங்கள் மிகவும் குறைவாகும். அதற்குள் சிங்களவர்களுக்கும் பங்கிடுவதென்பது எதிர்காலத்தில் பாரிய பிரச்சனைகளை தோற்றுவிக்கக்கூடும் என்ற அச்சம் அதாவுல்லாஹ்வின் ஆதங்கத்தின் பின்னால் உள்ளது.

இதேபோன்றுதான் அண்மையில் வில்பத்து பிரச்சனை சம்பந்தமாக தீர்வொன்றை அடைவதற்கு ரவூப் ஹக்கீம் முசலியில் கூட்டிய கூட்டம் குழப்பப்பட்டு அம்முயற்சி சரியான முறையில் முன்னெடுக்கப்படவில்ல என்று குற்றம் சாட்டப்பட்டிருக்கின்றது. இதற்கு சொல்லப்பட்டிருக்கின்ற காரணம் ஜனாதிபதியின் செயலாளரின் பங்குபற்றுதலோடு இந்நிகழ்வு நடைபெறுவதாக முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தும் நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் கலந்துகொள்ளாமையால் அக்கூட்டம் பிரயோசனமற்றது என்ற கருத்து முன்வைக்கப்பட்டுள்ளது.

இவை ஒவ்வொன்றையும் நாம் பார்க்கின்றபோது நமது பிரச்சனைகளைத் தீர்ப்பதற்காக அனுகுகின்ற முறைமையினால் ஏற்படுகின்ற கோளாறுகள் என்றே கருதவேண்டியிருக்கின்றன. ஏனெனில் நமது மக்கள் பிரதிநிதிகள் பல்வேறு கட்சிகளில் இருப்புக் கொண்டிருப்பதனால் அவரவர்களின் கட்சி சார்ந்த கொள்கையின் நிமித்தம் அல்லது அவர்களுக்கு இசைவான பாங்கில் பிரச்சனைகளுக்குத் தனித்தனியாக தீர்வை அடைவதற்கு முனைவதாகும்.

இத்தகைய முன்னகர்வுகளினூடாக நமது பிரச்சனைகள் தீர்வதற்குப் பதிலாக பிரச்சனைகள் பெருகுவதற்கும் தொடர்ந்தும் இருந்துவருவதற்கும் வழியாகி இருப்பதைக் காண்கின்றோம். இதற்கு பிரதான காரணம் ஒரு விடயத்தின் தீர்வென்பது ஒரே முகமாக அல்லாமல் பல மாதிரிகளைக் கொண்டதாக அமைவதாகும். ஆக இந்த நடைமுறைமையை நாம் மாற்றிக்கொள்ள வேண்டிய கட்டாயத்தை நம் மத்தியில் வலுப்படுத்துகின்றது.

கட்சிகளுக்கு அப்பால் நமது பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதற்காக வேண்டி அனைத்து முஸ்லிம் மக்கள் பிரதிநிதிகளும் ஓரணியில் ஒன்றுதிரண்டு பிரச்சனைகளுக்காக அவரவர்கள் எடுக்கின்ற நகர்வுகளில் உள்ள சாதக பாதகங்கள் குறித்து கலந்துரையாடி நமது சமூகத்தில் இருக்கின்ற புத்திஜீவிகள், உலமாக்கள், துறைசார்ந்த நிபுணர்கள் போன்ற குடியியல் சமூகத்தவர்களையும் உள்வாங்கி இறுதித் தீர்மானமாக ஒன்றை எடுப்பதாகும்.

உதாரணமாக மாயக்கல்லிப் பிரச்சனை என்றால் காணிக்கு பதிலாக மாற்றுக்காணியை பெறுவது நன்மை என்றால் அதனைப் பெறுவது, அல்லது அவ்விடத்தில் விகாரை அமைவது எந்த வகையிலும் நியாயமற்றது என்றால் அதற்காக ஒருசேர கைகோர்த்து எதிர்ப்பது என்று எதில் முஸ்லிம்களுக்கு அதிக சாதகத்தன்மை இருக்கிறதோ அதில் ஒன்றிணைந்து அதற்காக குரல் எழுப்புவதே தீர்வை நோக்கிய ஆரோக்கியமான நகர்வாகும்.

இது மாயக்கல்லி விவாகரத்துக்கு மட்டுமல்லாது நமது பெரும்பிரச்சனையாக மாறிக்கொண்டுவருகின்ற நில அபகரிப்பு மற்றும் காணி கபளீகரம், எல்லை நிர்ணயத்தில் ஏற்பட்டிருக்கின்ற முஸ்லிம் பிரதிநிதித்துவ இழப்புக்கான நடவடிக்கை, எதிர்காலத்தில் கொண்டுவரப்பட இருக்கின்ற அரசியல் அமைப்பு திருத்தம் அல்லது மாற்றத்தில் நமது சமூகத்தைப் பாதிக்கக்கூடிய விவகாரங்களில் இவ்வாறான முயற்சிகளை கையாள்வதனூடாகத்தான் தவிர்ப்பதற்கு அல்லது தணிப்பதற்கு வழியேற்படுத்தும் என்று நம்பலாம்.

இங்கு ஒரு முக்கியமான விடயத்தைக் கவனத்திற்கொள்ள வேண்டும். நமது முஸ்லிம் மக்கள் பிரதிநிதிகள்  எந்தக் கட்சி சார்ந்தவர்கலாக இருந்தாலும் அவர்களிடையே பிரச்சனைகளில் அனுகுகின்ற முறையில் வேறுபாடுகள் காணப்படுகின்ற போதிலும் அந்தப் பாங்கில் தீர்வுகளைத் தேட முற்படாது பொதுவாக அனைவரும் ஒன்றிணைந்து ஒரே தீர்வாக முன்னெடுப்பதற்கு நமது முஸ்லிம் தனிக் கட்சிகளின் தலைவர்கள் தங்களை தயார்படுத்திக்கொள்ள முன்வரவேண்டும்.

அதேபோன்று பெரும் தேசியக் கட்சிகளில் அங்கம் வகிக்கின்ற நமது மக்கள் பிரதிநிதிகள் அவர்களின் தலைமைத்துவப் பாங்கில் தீர்வுகளுக்குச் செல்லாது முஸ்லிம் மக்களுக்கு சார்பான சாதகமான நியாயங்களை அவர்கள் ஏற்கும் வகையில் தமது நகர்வுகளை முன்னெடுக்க முன்வருதல் வேண்டும்.

ஆகவே தீர்வுகளைத் தூரமாக்குகின்ற நகர்வுகளில்தான் நமது மக்கள் பிரதிநிதிகள் இருந்துவருகின்றனர் என்பதை கடந்தகால அனுபவங்கள் மிக தெளிவாக உணர்த்திநிற்கின்றன. எதிர்காலங்களிலும் இவ்வாறான முயற்சிகளை மேற்கொள்ளாது புதிய கோணத்தில் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கான முறையான அனுகுமுறைகளை இக்கட்டுரையில் சுட்டிக்காட்டியதைப் போலவோ அல்லது இதைவிட சிறந்த முறையொன்றினூடாக இணைந்து நமது ஒவ்வொரு பிரச்சனைகளுக்கும் தீர்வை எட்டிக்கொள்ள முயல்வதுதான் சிறந்த நடைமுறையாக அமையும்.

-எம்.எம்.எம்.நூறுல்ஹக்