மீரியபெத்த முதல் மீதொட்டமுல்லை வரை

இயற்கை, செயற்கை அனர்த்தங்களினால் மனித குலம் இன்னியுரையும், சொத்துக்களையும் தினமும் இழந்துகொண்டுதான் இருக்கிறது இப்பூமியில். அதற்கு இலங்கைத் திருநாடும் விதிவிலக்கல்ல. காலத்திற்குக்காலம் நிகழும் இயற்கை, செயற்கை அனர்த்தங்கள் நம் எல்லோரையும் அதிர்ச்சிக்குள் ஆழ்த்தி விடுவது மாத்திரமின்றி. உயிர்களையும், சொத்துச் செல்வங்களையும் அழித்துவிடுகின்றன.

கடந்த 2004ஆம் ஆண்டு முதல் 2017 ஆம் ஆண்டின் இக்காலப் பகுதி வரையான காலங்களில் இந்நாட்டில் இடம்பெற்ற அனர்த்தங்களை நோக்குவோமாயின,; 2004 ஆண்டில் ஏற்பட்ட சுனாமிப் பேரலை அனர்த்தம், 2009 மே மாதத்தில் முள்ளிவாய்காலில் முடிவுற்ற 30 வருட கால இறுதி யுத்தத்தின் அழிவுகள், 2010ம் ஆண்டில் கிழக்கில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு, 2014இல் மீரியபெத்த கொஸ்லந்த பிரசேத்தில் இடம்பெற்ற மண் சரிவு, 2016ல் கொலன்னாவையையும் அதை அண்டிய பிரதேசங்களிலும் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு, அத்தோடு கடந்த 14ஆம் திகதி சித்திரைப் புத்தாண்டுத் தினத்தில் மீதொட்டமுல்லையில் நிகழ்ந்த குப்பை மேட்டின் சரிவு என்பவற்றை ஒரு தசாப்த காலத்துக்குள் இலங்கையை அதிர்ச்சிக்குள்ளாக்கிய அனர்த்தங்களாகச் சுட்டிக்காட்டலாம்.

இலங்கையும் அனர்த்தங்களும்

இயற்கை எழில்கொண்ட இலங்கை அனர்த்தங்களினால் காலத்துக்காலம் அவதிப்படுகிறது. இந்நாட்டில் இடம்பெற்ற அனர்த்தங்களில் 2009ஆம் ஆண்டுக்கு முன்னதான 30 வருட காலப்பகுதியில் நிலவிய யுத்தம் பல அழிவுகளை ஏற்படுத்தியது. இன, மத வேறுபாடின்றி பல்லாயிரக் கணக்கானோர் இந்த யுத்தத்தினால் மாண்டு போனார்கள்;. ஆயிரக்கணக்கானோர் அங்கவீனர்களானார்;கள், காணாமலும் ஆக்கப்பட்டிருக்கிறார்கள், உள்ளுரிலும் கடல்கடந்தும் இடம்பெயர்ந்து வாழவும் செய்யப்பட்டிருக்கிறார்கள்.

இவ்வாறு இச்செயற்கை யுத்த அனர்த்தமானது இலங்கை மக்களை சமூக பொருளாதார, உடல், உள ரீதியில் பாதித்திருக்கிறது. அதிலும், கிழக்கு மற்றும் வடக்கு மக்களை இந்த யுத்தம் அதிகம் துவசம் செய்தது என்பதை மறுக்க முடியாது.

இச்செயற்கை யுத்தத்துக்கப்பால் 2004ல் ஏற்பட்ட சுனாமி அனர்த்தமானது ஏறக்குறைய 35 ஆயிரம் இலங்கையரை காவுகொண்டதுடன் பலகோடி பெறுமதியான சொத்துக்களையும் அழித்துச் சென்றது. மக்கள் மனங்களில் மறக்க முடியாத ரணங்களை ஏற்படுத்தியது. அதன் வடுக்கள் இன்னும் மாறவுமில்லை. மறையவுமில்லை. இன்றுவரையும் சுனாமியினால் பாதிக்கப்பட்டு வீடுவாசலை இழந்தவர்களாக பலர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

அத்தகையவர்களுக்காக நிர்மானிக்கப்பட்ட வீடுகள் கூட முறையாகப் பகிர்ந்தளிக்கப்படவில்லை. அம்பாறை மாவட்டத்தின் நுரைச்சோலை வீட்டுத்திட்டம் இதற்கோர் அத்தாட்சியாகும். அரசியல்வாதிகளின் அதிகாரப் போட்டிகளினாலும், இனவாதத்தின் கெடுபிடிகளினாலும் சுனாமியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நிர்மானிக்கப்பட்ட இந்த வீட்டுத்திட்டம் பாம்புகளினதும், பறவைகளினதும் வாழ்விடமாக மாறிக்கொண்டிருக்கிறது.

மறக்கமுடியாத ரணங்களை மக்கள் மனங்களில் உண்டுபண்ணிய சுனாமியின் பின்னர் இலங்கை மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய அனர்த்தங்கள் என்ற ரீதியில் 2014 ஒக்டோபர் மாதம் நிகழ்ந்த மீரியபெத்த கொஸ்லந்த மண்சரிவும், 2016 மே மாதத்தில் கொலன்னாவைப் பிரதேசம் உட்பட மேல் மாகாணத்தின் பல பிரதேசங்களில் ஏற்பட்ட பௌ;ளப்பெருக்கும், கடந்த 14ஆம் திகதி மீதொட்டமுல்லை குப்பை மேடு ஏற்படுத்தியுள்ள அனர்த்தமும் மறக்கப்பட முடியாத இயற்கை, செயற்கை அனர்த்தங்களாகவே மக்கள் மனங்களில் பதிவாகியிருக்கின்றன.

இயற்கையின் நியதிகளினால் அனர்த்தங்கள் நிகழ்ந்தாலும், அதன்பாதிப்புக்கள் மக்களைச் துசவம் செய்தாலும் மனித செயற்பாடுகளினால் ஏற்படுகின்ற அனர்த்தங்களும் அதன் பாதிப்புக்களும் மக்களிடையே பல்வேறு எதிர்வினைகளை ஏற்படுத்தி விடுகிறது. மீரியபெத்தை முதல் மீதொட்டமுல்லை வரை நிகழ்ந்தேறியுள்ள அனர்த்தங்கள் அவற்றைப் பறைசாற்றிக் கொண்டிருக்கின்றன.

மீரியபெத்த அனர்த்தமும் நினைவுகளும்

இற்றைக்கு இரண்டு வருடங்களுக்கு முன்னர் 2014ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 29ஆம் திகதி காலை 7.00 மணிக்கு மழைத்துளிகளினால் நனைந்து கொண்டிருந்த மண்வீடுகளையும,; மரங்களையும் மண்ணோடு மண்ணாகப் புரட்டிப்போட்டு மலையக மக்களை அதிர்ச்சிக்கும,; ஆழ்ந்த துயரத்துக்கும், உயிரிழப்புக்கும் உள்ளாக்கிய ஹல்துமுல்ல மீரியபெத்த மண்சரிவு அனர்த்தம் மலையக மக்கள் மனங்களில் இன்னும் நிழலாடிக்கொண்டிருக்கிறது.

இக்கோர மண்சரிவினால் ஏறக்குறைய 200 ஏக்கர் நிலப்பரப்பு மண்ணுக்குள் புதையுண்டு போனது. களிமண்ணினாலும் தகடுகளினாலும் வேயப்பட்ட அரைகுறை அடிப்படை வசதிகளோடு அமைந்த ஏறக்குறைய 150 வீடுகளில் வாழ்ந்த மலையகத்தின் முதுகெழும்பான தேயிலை பறிக்கும் கூழித் தொழிலாளர்கள் பலர்; மண்ணுக்குள் புதையுண்டு போனார்கள். புதையுண்டு போனவர்களின் 13 உடல்கள் கண்டெடுக்கப்பட்டதுடன் 28பேர் காணமல் போனதாகவும் 1,875 பேர் இவ்வனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டதாகவும் அனர்;த்தத்தின் பின்னரான புள்ளிவிபரங்கள் சுட்டிக்காட்டின.

நாட்டின் பொருளாதாரத்தின் முக்கிய வருமானத்துறையாக ஒரு காலத்தில் விளங்கிய, தற்போதும் விளங்கும் தேயிலைக்காக தங்களது வியர்வைகளை விலைகொடுத்து வாழ்வின் பொழுதுகளை மண்ணுக்காக அர்ப்பணிக்கும் மலையக அந்த ஹல்துமுல்ல மக்களின் சாவுகள் முழு உலகின் ஊடகங்களையுமே பேசவைத்தது. மக்களைத் துயரத்தில் மூழ்கச் செய்தது.

இயற்கை, செயற்கை அனர்த்தங்களை தடுக்க முடியாவிட்டாலும் நாம் நமக்குள்ள அறிவினூடாக, அறிவூட்டல்களினூடாக அவற்றிலிருந்து பாதுகாப்பைத் தேடிக்கொள்ள முடியும.; நாம் பாதுகாப்பை பெற்றும், பாதுகாப்பு நமக்கு கிடைக்கப்பெற்றும் நமது உயிர் இயற்கை, செயற்கை அனர்த்தங்களினால் பிரிகிறது என்றால் அது இறைவன் விதி. அதை மாற்ற முடியாது.

ஆனால், ஹல்துமுல்ல கொஸ்லாந்த மீரியபெத்த மக்களின் இன்னுயிர் மண்ணுக்குள் மாண்டுபோனமை விதிக்கு அப்பால் விதியைத் தேடிக்கொண்டதாக அமைந்தது. அல்லது அவர்கள் அந்த விதிக்குள் அகப்பட்டு மாண்டுபோகாமல் தடுப்பதற்கான வழிகள் அவர்களுக்கு ஏற்படுத்திக்கொடுக்கப்படவில்லை என்பதை அக்காலத்தில் வெளியான தகவல்களின் மூலமாக அறிய முடிந்தது.

தேசிய கட்டட ஆய்வு நிலையம் 2005ஆம் ஆண்டும் 2012 ஆம் ஆண்டும் மேற்கொண்ட ஆய்வின் பிரகாரம் இப்பிரதேசம் வாழ்விடத்திற்கு பாதுகாப்பற்றது என அறிவிந்திருந்தது. இது தொடர்பில் தோட்ட அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டிருந்தனர். பிரதேசத்தில் வாழ்;ந்த மக்கள் மண்சரிவு அபாயம் தொடர்பில் அறிவுறுத்தப்பட்டதாகவும் அவர்களுக்கான மாற்றுக் காணிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும்;. தெரிவிக்கப்பட்டது. ஆனால், மண்சரிவு அனர்த்தத்தில் சிக்கி உயிர்தப்பியவர்கள் எவ்வித மாற்றுக் காணியும் எங்களுக்கு வழங்கப்படவில்லை என்று தெரிவித்திருந்தனர்.

இப்பிரதேச மக்களின் பாதுகாப்பு குறித்து அரசாங்கம் முன்னதாகவே எச்சரிக்கை விடுத்திருந்தும்; அவை உரிய தோட்ட அதிகாரிகளினால் செயற்படுத்தப்படவில்லை என்ற குற்றச்சாட்டு அக்காலத்தில் முன்வைக்கப்பட்டது. அதிகாரிகள் தங்களது கடமைகளை துஷ்பிரயோகம் செய்தமையே அந்த அனர்த்தத்தில் உயிர்கள் காவுகொள்ளப்படக் காரணமாயிற்று.

அரசாங்கம் ஒரு கட்டளை பிறப்பிக்குமாயின் அதை செயற்படுத்துவது அதிகாரிகளின் கடமையாகும.; கட்டளையைப் பிறப்பிக்கின்ற ஜனாதிபதியோ, அல்லது அமைச்சரோ அல்லது நிறுவனத் தலைவரோ நேரடியாக செயற்பாட்டில் இறங்கி செயற்பட முடியாவிட்டாலும். அதைச் செயற்படுத்தும் பொறுப்பைச் சுமந்தவர்களாக அதிகாரிகள் உள்ளனர் என்பது சுட்டிக்காட்டப்படதக்கதாகும்.

இயற்கை அனர்தத்தங்கள் ஏற்படுவதைத் தவிர்க்க, தடுக்க முடியாவிட்டாலும் அவற்றிலிருந்து மக்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் உரியவர்களினால் முன்கூட்டி எடுக்கப்படுவதும் மக்கள் இயற்கை அனர்த்தங்களிலிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்வதற்கான செயற்பாடுகளை கிடைக்கப்பெறும் அறிவுறுத்தல்கள் மற்றும் வழிகாட்டல்களுக்கு ஏற்ப முன்னெடுப்பதும் அவசியமாகும்.

ஆனால், மனித செயற்பாடுகளினால் ஏற்படுகின்ற செயற்கை அனர்த்தங்களுக்கான பொறுப்பைச் சுமக்க வேண்டியவர்கள் அவற்றுடன் சம்பந்தப்பட்டவர்கள் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. மீதொட்டமுல்லை குப்பை மேட்டின் சரிவினால் ஏற்பட்ட அனர்த்தமானது மனித செயற்பாடுகளினால் ஏற்பட்டதாகும். இதற்கான பொறுப்பை ஏற்க வேண்டியவர்கள் அவற்றுடன் சம்பந்தப்பட்டவர்கள்தான்

மீதொட்டமுல்லை அனர்த்தமும் எதிரொலிகளும்

உலகில் அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகள் வரிசையில் நான்காவது இடத்தைப் பிடித்துள்ள இலங்கையின் வர்த்தக தலைநகர் கொழும்பு ஸ்மார்ட் நகரமாக மாறிக்கொண்டிருக்கும் இக்காலகட்டத்தில் குப்பைகள் ஏற்படுத்தும் பிரச்சினைகளுக்கும், குப்பைகளினால் ஏற்படும் அனர்த்தங்களுக்கும் இன்னுமே முறையானதும் நிரந்தரமானதுமான தீர்வு எட்டப்படவில்லை. மீதொட்டமுல்லை குப்பை மேடு சரிந்து விழுந்ததில் 32 உயிர்கள் காவு கொள்ளப்பட்டுள்ளன.

காணமல் போனவர்களைத் தேடும் பணிகள் தொடரும் நிலையில்;, 228 குடும்பங்களைச் சேர்ந்த 980பேர் இடம்பெயர்ந்த நிலையில் நலன்புரிநிலையங்களில் தஞ்சமடைந்துள்ளனா,; 150 மேற்பட்ட குடியிருப்புக்கள் முற்றாகவும் பகுதியளவிலும் குப்பைகளினால் பாதிக்கப்பட்டிருக்கிறது. முறையற்ற மனித செயற்பாடுகளினால் நிகழ்ந்துள்ள இக்குப்பை அனர்த்தம் இலங்கை முழுதும் பேசு பொருளாக மாறியுள்ளதுடன் உலக நாடுகளின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

கொலன்னாவை பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட சீதாவத்தை, வெலவத்தை, கொட்டுவில, குருனியாவத்தை, கிட்டம்பகுவ, விகரகொட, வென்னவத்தை மற்றும் கல்முல்லை ஆகிய எட்டு கிராம சேவகர் பிரிவுகள் இந்த மீதொட்டமுல்லைப் குப்பை மேடு பிரதேசத்தைச் சுற்றிவுள்ளன. ஏறக்குறைய 5,000 குடும்பங்களைச் சேர்ந்த 20,000 குடியிருப்பாளர்கள் இக்குப்பை மேடு பிரதேசத்தைச் சுழ வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

மீதொட்டமுல்லையிலுள்ள பொட்டுவில்கும்பற என்ற பிரதேசத்தில் சிரிய பரப்பளவில் முல்லேரியா மற்றும் கொலன்னாவைப் பிரதேசங்களில் சேர்க்கப்படும் திண்மக் கழிவுகள் ஆரம்பத்தில் கொட்டப்பட்டன. பின்னர் இதைத் தொடர்ந்;து ப்ளுமென்றல் பிரதேசத்துக்கு மாற்றப்பட்டது. இருப்பினும், கொழும்பு மாநகர எல்லைக்குட்பட்ட பிரதேசங்களில் சேர்க்கப்படும் திண்மக் கழிவுகள் 2009ஆம் ஆண்டிலிருந்து இந்த மீதொட்டமுல்லைப் பிரசேத்தில் கொட்டப்பட்டு வந்துள்ளன. இவ்விடத்தில் குப்பைகள் கொட்ட ஆரம்பிக்கப்பட்ட காலம் முதல் இப்பிரதேசத்தைச் சுற்றியுள்ள குடியிருப்பாளர்களினால் இதன் பாதிப்புக்களுக்கு எதிராக தொடர்ச்சியாக பல்வேறு ஆர்ப்பாட்டங்களும் போராட்டங்களும் மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளன.

அத்தோடு, பிரதேச குடியிருப்பாளர்களினால் கொழும்பு மாநகர சபைக்கு எதிராக அடிப்படை மனித உரிமை மீறல் குறித்த வழக்கும் உயர் நீதி மன்றில் தாக்கல் செய்யப்பட்டது. இதற்கேற்ப, இவ்விடத்தில் குப்பைகள் கொட்டப்படுவது இரண்டு வருடத்திற்குள் நிறுத்தப்ப வேண்டுமெனவும், குப்பைகள் கொட்டும் பிரசேத்தை இரண்டு ஏக்கர்களாக மட்டுப்படுத்தப்பட வேண்டுமெனவும் உயர் நீதிமன்றினால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆனால், அதிகாரிகளினால் அவை கவனத்தில் கொள்ளப்படவில்லை என்பதை கடந்த 14ஆம் திகதி இக்குப்பை மேடு சரிந்து விழுந்து அப்பிரதேச மக்களின் வாழ்வை கேள்விக்குறியாக்கியிருப்பதன் மூலம் புடம்போடப்பட்டுள்ளது. 17 முதல ;20 ஏக்கர் நிலப்பரப்பில் ஏறக்குறைய 20 அடி உயரம் வரை உயர்ந்த குப்பை மலை சரிந்து விழுந்து சிங்கள-தமிழ் மக்களின் புதுவருட புத்தாண்டைக் கூட கொண்டாடாமல் ஆக்கியிருக்கிறது. தினமும் இக்குப்பை மேட்டுப் பிரதேசத்தில் ஏறக்குறைய 800 தொண் திண்மக்கழிவுகள் கொட்டப்படுவதாக தரவுகள் குறிப்பிடுகின்றன.

இப்பிரதேசத்தில் குப்பைகள் தொடர்ச்சியாகக் கொட்டப்பட்டு வந்ததனால் இந்த மீதொட்டமுல்லை குப்பை மேட்டைச் சுற்றியுள்ள பிரதேச மக்கள் தொடர்ச்சியாக சுகாதார அச்சுறுத்தலுக்கு ஆளாகி வந்துள்ளனர். டெங்குக்காய்ச்சல், எலிக்காய்ச்சல், தோல் நோய்கள், சிறுநீரக நோய்கள் உட்பட பல நோய்த்தாக்கங்களுக்கு இப்பிரதேச வாசிகள் முகம்கொடுக்க வேண்டி ஏற்பட்டதாகவும் சுட்டிக்காட்டப்படுகிறது. ஆனால், இப்பிரதேச மக்களின் ஆரோக்கிய வாழ்வு குறித்து அதிகாரிகளினால் அக்கறை கொள்ளப்படவில்லை. இப்பிரதேசத்திலிருந்து குப்பைகளை அகற்றுவதற்கும் முறையான திண்மக் கழிவு அகற்றும் பொறிமுறையை மேற்கொள்ளவும் நடவடிக்கைககள் ஆக்கபூர்வமாக முன்னெடுக்கப்படவில்லை என்பதை தெளிவுபடுத்தியுள்ள இந்த அனர்த்தம் இப்பிரதேச மக்களை தொடர்ந்தும் இப்பிரதேசத்தில் வாழ்வதற்கான உத்தரவாத்தை இல்லாமல் செய்திருக்கிறது.

‘வாழ்வதற்கு தகுந்த இடம் என்பதனாலேயே இங்கு எங்களது குடியிருப்புக்களை அமைத்துக் கொண்டோம். குப்பைகள் கொட்டப்படும் இடமாக இருந்திருந்தால் நாங்கள் இப்பிரதேசத்தில் வாழ விரும்பியிருக்க மாட்டோம்’., ‘மீண்டும் நாங்கள் பலிகொள்ளப்படுவதை விரும்பதனால் இங்கு வாழ விரும்பவில்லை’. ‘மேலும் பாதிப்புக்களைச் சந்திக்காத பிரதேசத்தில் நிம்மதியாக வாழ்வதற்கு நிரந்த இடமொன்றை அரசாங்கம் வழங்க வேண்டும்’ ‘பாதிக்கப்பட்டுள்ள எங்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்கப்பட வேண்டும்’. ‘அரசாங்கம் இப்பிரச்சினைக்கு விரைவில் தீர்வைப் பெற்றுத்தருவதுடன் எங்களது நிம்மதிக்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும்.’ இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ள மீதொட்டமுள்ள இப்பிரதேச மக்களின் கோரிக்கைகள் வெளிவந்துகொண்டிருக்கின்றன.

இந்நிலையில், அரசியல்வாதிகளினதும், அதிகாரிகளினதும் கருத்து வேறுபாடுகளுக்கு மத்தியில் மீதொட்டமுல்லை குப்பை பிரச்சினைக்கான தீர்வு குறுகிய காலத்துக்குள் பெறப்பட வேண்டும் என்பதில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதியாகவுள்ளார் என்பதையும் சுட்டிக்காட்ட வேண்டும்.

மண்சரிவு, குப்பைச் சரிவு மாத்திரமல்ல, எந்தப்பிரதேசங்கள் எந்தந்த அனர்தத்தங்களுக்கு உள்ளாகக் கூடிய பிரதேசங்கள் என வரையறை செய்யப்பட்டுள்ளதோ அந்தப் பிரதேசங்களில் வாழும் மக்களைப் பாதுகாப்பதற்கு அதிகாரிகள் தங்களது பொறுப்பை முறையாக மேற்கொள்ள வேண்டும். அவை தொடர்பில் அறிவூட்டல்களும் விழிப்புணர்வூட்டல்களும் தொடர்ச்சியாக அவர்களால் வழங்கப்படுவதும் அதற்கேற்ப மக்கள் செயற்படுவதும் அவசியமாகும். இத்தகைய அனர்த்தங்களின் முன்னரும் அனர்த்தங்கள் இடம்பெறும்போதும் அனர்த்தங்களின் பின்னரும் என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றிய பூரண அறிவை அனைவரும் அறிந்து கொள்வதும் அவசியமாவுள்ளது.

அது மாத்திரமின்றி, வெள்ளம் வரும் முன் அணைகட்டப்பட வேண்டும் அல்லது அணைகட்டுவிக்கப்பட வேண்டும். அனர்த்தங்கள் எப்போதும் ஏற்படும். ஓர் அனர்த்தம் ஏற்பட்ட பின்னர் அவற்றுக்கு அனை கட்டுவதற்கு முயற்சிக்காமல் எத்தகைய அனர்த்தம் அவ்வாறு ஏற்படும் அவற்றிலிருந்து மக்களை எவ்வாறு பாதுகாக்க முடியும். அற்கான வழிமுறைகளை எவ்வாறு நடைமுறைப்படுத்தலாம்; என்பதில் அதிகாரிகள் அக்கறை கொண்டு செயற்படுவார்களேயானால் அனர்த்தங்களிலிருந்து மக்களைப் பாதுகாத்துக்கொள்ள முடியும் என்பதை மீரியபெத்த மண்சரிவு முதல் மீதொட்டமுல்லை குப்பை மேடு சரிவு வரை புடம்போட்டுக்காட்டியிருக்கிறது.

எது எவ்வாறு நடைபெறுகின்றபோதிலும், இக்குப்வைச்சரிவினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு இன்று தேவையானது அவர்களுக்;கான அன்றாட நாளைக் கழிப்பதற்கான அடிப்படை வசதிகளாகும. அவற்றை அரசாங்கம் நிறைவு செய்து வருகின்ற போதிலும,; முடிந்தவர்கள் தங்களால் முடியுமான உதவிகைளப் புரிவது மனித நேயமாகும்.

அத்துடன், குடும்ப உறவுகளை இழந்தவர்கள் ஆழாத்துயரில் உரைந்து போய் உள்ளார்கள. குப்பைச்சரிவிலிருந்து தப்பியவர்கள்; இழப்புக்களைச் சுமந்து வாழ்நாளைக் கழித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் உடனடித் தேவைகள் நிறைவு செய்யப்படுவதுடன் அவர்களது உள்ளங்கள் ஆற்றுப்படுத்தப்படுவதும் அவசியமாகும்.

-எம்.எம்.ஏ.ஸமட்